Saturday, November 29, 2008

திருமணம்


இஸ்லாமிய மார்க்கத்தில் திருமணம் என்பது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படும் வாழ்க்கை ஒப்பந்தமாகும். மாற்று மதத்தில் கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுவது இஸ்லாத்தில் இல்லை. திருமணம் புரியவுள்ள ஆணும் பெண்ணும் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருவரும் தங்களது பரிபூரண சம்மதத்தை தெரிவிக்க வேண்டியது மிக அவசியமாக வலியுறுத்தப்பட்ட விஷயமாகும்.

     முன்பே மணமுடிக்கப்பட்டு கணவனை இழந்துவிட்ட விதவையும், அல்லது முந்திய கணவனால் விவாக முறிவு (தலாக்) கொடுக்கப்பட்ட பெண்ணும் தனக்காக இத்தா காலம் முடிந்ததும் மறுமணம் முடிக்க விரும்பினால் அப்பெண்ணின் முழு சம்மதத்தையும் பெற்றே மண முடித்து வைக்கவேண்டும். இப்பெண்களை அயிம்மா என்றோ தய்யிபா என்றோ அழைப்பர்.

    கண்ணிப்பெண்ணாக இருப்பாளேயானால் அவள் தனது சம்மதத்தை மெளனம் மூலம் தெரிவிக்கலாம். அவளுக்கு விருப்பமில்லையெனில் கட்டாயம் சொல் மூலம் தெரிவிக்க வேண்டும். அவள் எந்த பதிலும் தராமல் மெளனம் சாதித்தால் அது சம்மதம் என்ற பொருளைத் தரும். இப்பெண்களை 'பாகிரா' என்று அழைப்பர்.

    'அயிம்மா' பெண்களுக்கு அவர்களது சம்தமின்றி திருமணம் செய்து வைக்காதீர்கள். கன்னிப் பெண்களிடம் திருமணம் விஷயமாக அனுமதி பெற வேண்டும் என்று நபி(ஸல்) கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஒரு கன்னிப்பெண் (நாணாத்தால்) தெளிவாகச் சொல்ல வெட்கப்படுவாளே! என்று சிலர் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவளது மெளனம் சம்மதமாகும் என்றார்கள். அறிவிப்பாளர்: ஆயிஷா, அப்பாஸ், அபூஹுரைரா(ரழி- அன்கும்) நூல்:புகாரி முஸ்லிம் அபூதாவூத், நஸயீ,திர்மிதி, இப்னுமாஜ்ஜா

    இந்த நபிமொழி மூலம் ஏற்கனவே திருமணம் செய்த பெண்கள் தங்களது அடுத்த திருமணத்துக்கு தெளிவான சம்மதம் தெரிவிக்க வேண்டுமென்பதை அறியலாம். கன்னிப்பெண்கள் தங்களது சம்மதத்தை மெளனம் மூலம் தெரிவிக்கலாம். சம்மதம் இல்லையெனில் நிச்சயமாக வாய்விட்டு சொல்லியே ஆக வேண்டுமென்பதை உணரலாம். இவ்விதமாக மணப்பெண்ணின் சம்மதம் பெறாமல் நடத்தி வைக்கப்படும் திருமணம் இஸ்லாத்தில் செல்லத்தக்கதல்ல. அது முறிக்கப்படும்.

    கன்சா(ரழி) என்ற அம்மையார் அறிவிக்கிறார்கள்; எனது தந்தை கிதாம்(ரழி) அவர்கள் எனக்கு பிடிக்காத இடத்தில் மணமுடித்துக் கொடுத்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து இதனைக் கூறியபோது அந்த திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்து செய்தார்கள். இதே நிகழ்ச்சியை இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும் அறிவிக்கிறார்கள். (முஅத்தாமாலிகி, புகாரி, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜ்ஜா, பைஹகீ)

    இவ்விதம் தனது தந்தையின் வற்புறுத்தலில் நடத்தப்பட்ட திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் மூலமாக ரத்து செய்யப்படவே கன்சா(ரழி) அவர்கள் அபூலுபாபா(ரழி) அவர்களை மணமுடித்துக் கொண்டார்கள் என்ற விபரம் அப்துர்ரஹ்மான் பின் யஜீத்(ரழி) அறிவிக்க இப்னுமாஜ்ஜா என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதே போல் ஒரு கன்னிப்பெண் சம்மதமின்றி அவளது தந்தையால் நடத்தி வைக்கப்பட்ட திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்து செய்ததாக அபூதாவூதில் இப்னு அப்பாஸ்(ரழி) கூற பதிவு செய்யப்பட்டுள்ளது.

    எனவே எந்த முஸ்லிம் பெண்ணையும் அவளது முழு சம்மதமின்றி திருமணம் செய்து வைக்க இஸ்லாத்தில் இடமில்லை. அப்பெண்ணைப் பெற்றெடுத்த தந்தைக்கும் அனுமதியில்லை என்பதை தெளிவாக உணர்ந்து பெற்றோர்கள் நடந்து கொள்வது அவசியமாகும்.

    மணமகளுக்குரிய தகுதிகள்

    நீ நல்லொழுக்கமுள்ளவளை மணம் புரிவதன் மூலம் வெற்றியடைந்துகொள்! என நபி(ஸல்) அவர்கள் அறிவுரை பகன்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்)

    பெண்களை அவர்களின் அழகுக்காக மணமுடிக்காதீர்கள்; அவர்களின் அழகு அவர்களை அழித்துவிடலாம்; அவர்களின் செல்வத்திற்காக மணமுடிக்காதீர்கள்; அவர்களின் செல்வம் அவர்களை தவறச் செய்திடலாம்; நல்லொழுக்கத்திற்காக அவர்களை மணமுடியுங்கள்; நல்லொழுக்கமுள்ள அழகற்ற கருநிறத்து அடிமைப்பெண் (தீய ஒழுக்கமுள்ள பெண்ணைவிட) மேலானவள் என நபி(ஸல்) அவர்கள் விளக்கினார்கள். (அறிவிப்பு: இப்னு அம்ர்(ரழி) நூல்: இப்னு ஹிப்பான், அஹ்மத்)

    மணமகனுக்குரிய தகுதிகள்

    எவருக்கு திருமண வயது வந்து விட்டதோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். அது அவரது கண்களையும், வெட்கஸ்தலங்களையும் பாதுகாக்கும் அரணாக அமைகிறது. எவருக்கு திருமணம் செய்ய வசதிபடவில்லையோ அவர் நோன்பு வைத்துக்கொள்ளட்டும். (அறிவிப்பு: இப்னு மஸ்வூத்(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம், நஸயீ, தாரமி, பைஹகீ, அஹ்மத்)

    இந்நபிமொழி ஆண்களுக்கு கூறப்பட்டதாகும். மணமகன் பெண்ணுக்காக மஹர், திருமண செலவு, வலீமா விருந்து என பல செலவு செய்யவேண்டியவனாகிறான். அது மட்டுமின்றி திருமணம் முடிந்த நேரம் முதல் தனது மனைவிக்காக உணவு, உடை, இருப்பிடத்திற்கான செலவுகள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். எனவேதான் மணமுடிக்கும் மணப்பெண்ணுக்கு தனது உடல் ரீதியான சுகத்தையும், பொருளாதார ரீதியான சுமையையும் சுமக்க தகுதியுடையவன் தனது திருமண வயது வந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம்; அதற்கான வசதியில்லாதபோது நோன்பு வைத்து தனது இச்சையை அடக்கவும் நபி(ஸல்) அவர்கள் அறிவுரை பகர்ந்தார்கள்.

    எங்கள் மனைவிக்கு நாங்கள் ஆற்றவேண்டிய கடமைகள் யாவை? என நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது 'நீ உன்ணும்போது அவளுக்கும் உணவளிக்க வேண்டும்; நீ ஆடை அணியும்போது அவளுக்கு ஆடை அணிவித்தல் வேண்டும்; அவளது முகத்தில் அடித்தலாது' என நபி(ஸல்) அறிவுறுத்தினார்கள். (அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதா(ரழி) நூல்: அபூதாவூத்)

    எனவேதான் ஒருவேளை செல்வ செழிப்புள்ள மனமகள் ஒருவருக்கு மனைவியாக அமைந்தாலும் அவளது சொத்து பங்கில் அவளது உரிமையின்றி கணவன் கைவைக்க அனுமதியில்லை என இஸ்லாம் கூறுகிறது. மண முடிக்க நாடும் மணமகன் தான் மணக்கும் பெண்ணை உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதுகாக்கும் தகுதியை பெற்றிருப்பது அடிப்படை தகுதியாகும்.

 




No comments: