Tuesday, April 16, 2024

Obituary - Rosmin Maharoof

Keep chasing your dreams! One day you will live the dream!



Rosmin Maharoof (An Astrophysicist Dreamer)

என்னிலும் ஒரு வயது இளையவன்...

2004-2005 காலப்பகுதியில் புத்தளம் ஸாஹிராவின் Head Prefect...

உன் பிரிவு செய்தி கேட்டு அதிர்ந்து போனேன்...

அன்று கிடைத்த Limited வழிகாட்டலினால் Bio Science ஐ தேர்வு செய்தாய்...அது பல்கலைக்கழக தேர்வுக்கு சோபிக்கவில்லை...

இருந்தும் உன் கனவும் தேடலும் வேறாக இருந்தது...

அது புத்தளம் வாலிபர்களுக்கு அந்நியமான தேடல்...ஆம்...
விண்ணின் விந்தைகளில் உனக்கு இருந்த தீராத காதல்...

உனது தொடர் ஆய்வுகளின் பிரதி உபகாரமாக அமெரிக்க விண்ணியல் நிறுவனம் ஒன்று உன் பெயரில் நட்சத்திரம் ஒன்றை பெயரிட்ட ஆதாரத்தை என்னிடம் காண்பித்ததையும் மறவேன்...

பல கஷ்டங்களுக்கு மத்தியில் விண்ணில் பறந்து பார்க்க வேண்டும் என்ற கனவில் அமெரிக்கா சென்றாய்...

சில நல்ல மனிதர்கள் எதிர்ப்பார்ப்பு இல்லாமல் உன் பயணத்துக்கு உதவினர்...என்றாலும் அமெரிக்கா சென்றவுடன் Odd Jobs செய்து உழைத்த ஊதியத்தால் உனக்கு உதவியவர்களுக்கு அவ்வன்பளிப்புக்களை கடன் (நன்றிக் கடன்) என மீளச் செலுத்திய பெருந்தன்மையை என்னவென்பது..!

உனது நேர்மைக்கு நான் சாட்சி கூறுவேன். பாடசாலை முடிந்த காலங்களில் நாம் நேரில் சந்தித்தது ஓரிரு சந்தர்ப்பங்களே.."மபாஸ் கா" என்ற அழைப்பைத் தொடர்ந்த அந்த புன்முறுவலை எப்படி மறப்பேன்..!

பி.ப 04.00மணிக்கு ஜனாஸா எடுக்கப்படும் என்று அஸர் தொழுகையுடன் 03.45இற்கே உன் வீட்டுக்கு விரைந்த எனக்கு ஏமாற்றமே காத்திருந்தது. வழியில் சில மூத்த பெண்கள் "ஜனாஸா சென்று விட்டதே" என்றவுடன் ஒரு விதமான கலக்கமும் வாட்டமும் என்னை பீடித்தது. மஸ்ஜிதுல் பகா அருகில் நெருங்கும் போது ஜனாஸா தொழுகை முடிந்து கூட்டம் வெளியேறுகின்றது. "இதனையும் தவற விட்டோமே" என்று மேலிட்ட கவலையோடு மையவாடிக்குள் நுழைந்தேன்...

அருகில் செல்லும் Rosmin இற்கு முன்னைய வருட Head Prefect நண்பனிடம் ஜனாஸா எடுத்த நேரம் குறித்து முறையிடுகின்றேன்...என் முறைப்பாட்டை இறைவன் புரிந்து கொண்டிருப்பான். "யார் இன்னும் ஜனாஸாவை பார்க்கவில்லை?" என்று கப்று அருகில் இருக்கும் சகோதரர்களின் பக்கமாக சத்தம் கேட்கின்றது. "அல்ஹம்துலில்லாஹ்" என்று மனதுக்குள் கூறியவனாக, அவ்விடம் விரைந்து Rosmin இன் துயிலும் முகத்தை இறுதியாக ஒரு முறை பார்க்க கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்! மனதின் ஏக்கங்களை புரிந்த இறைவன் மிக மகத்தானவன்!

அவனது பால்ய வகுப்பு நண்பன் அஷ்ஷெய்க் Yasmin Mufthi அவர்களின் நினைவேந்தலுடன் கூடிய பிராத்தனையுடன் நண்பர்கள், ஆசிரியர்கள், பாடசாலை உறவுகள், குடும்பத்தார்கள் புடை சூழ இனிதே நல்லடக்கம் செய்யப்பட்டது.

 யா அல்லாஹ் என் அன்புக்குரிய தம்பி Rosmin இன் பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தின் பூஞ்சோலைகளில் நுழைவிப்பானாக!

No comments: