Friday, January 20, 2012

சர்வாதிகாரிகளும், இணையப் பயனர்களும்...!

இணையம் எவ்வாறு புதிய யுத்த உத்திகளை அறிமுகப்படுத்தியுள்ளது என்பது பற்றி ஒரு கட்டுரை ஒன்றை இங்கு பதிந்து இருந்தேன்:
இந்த யுத்தங்களின் பின்னணியில்,சாதாரண பயனர்களையும் பலிகடாவாக்கும் சில திட்டங்கள் உலக அளவில் அரங்கேற்றம் பெறுவது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்:

தற்போதைய உலகில் உள்ள அனைத்து நாடுகளும் சமூக வலைதளங்களினால் மிகவும் பயந்து போய் உள்ளன என்பதே நிதர்சன உண்மை! எகிப்திய மக்களின் புரட்சிக்கு வித்திட்ட சமூக தளங்கள் 'எங்கே நம்ம நாட்டுக்குள்ளும் புகுந்து பிரச்சினையை கொண்டு வந்து விட்டு விடுமோ' என்பதே ஒவ்வொரு ஆட்சியாளர்களின் வயிற்றிலும் புளியை கரைத்த வண்ணமுள்ளது. இவ்வகையான சமூக தளங்களை சீனா, சிரியா உட்பட பல நாடுகள் ஏற்கெனவே தடை செய்திருக்கிறன. அமெரிக்க அரசினால் புதிதாக ஏற்படுத்தப்படவுள்ள Protect IP Act (PIPA, the Senate bill), Stop Online Privacy Act (SOPA, the House Bill) ஆகிய சட்ட நடைமுறைகளுக்கு எதிராக கடந்த வாரங்களில் இணைய உலகில் கடும் எதிர்ப்பலைகள் கிளம்பி உள்ளன.

இணையதளங்களையே மூலதனமாக வைத்து ஆட்சியை பிடித்த திருவாளர் ஒபாமா அமெரிக்காவில் ஒரு புதிய சட்டத்தை, SOPA (Stop Online Piracy Act) என்ற பெயரில் கொண்டு வர முனைந்தார். இச் சட்டத்தினால் குறிப்பிட்ட சில இணையதளங்களை அமெரிக்காவில் தடை செய்வதின் மூலம் தம் நாட்டின் நிஜ - நிழல் பிம்பங்கள் உலக அரங்கில் ஏறாதவாறு தடுத்து விடலாம் என்ற நோக்கில் முயற்சித்தார். ஒபாமாவின் இந்த முயற்சிக்கு அமெரிக்க மக்கள் மட்டுமல்ல; பிரபல இணைய நிறுவனங்களும் (Google, Twitter, Facebook, LinkedIn போன்றவை) ஒன்றாக சேர்ந்து கடும் எதிர்ப்பு குரல் கொடுத்தன.

ஒரே வாரத்தில் 72,000 -த்துக்கு மேலான Domain -களை இழந்த GoDaddy

இப்படி இணைய ஜாம்பவான்களே தம் எதிர்ப்புகளை தெரிவித்து கொண்டு இருக்கையில், Go Daddy என்னும் Domain & Hosting வழங்கி வரும் நிறுவனம் தனது ஆதரவை இந்த 'ஹிட்லர் தன' புதிய சட்டத்திற்கு கொடுத்தது. ஏற்கெனவே செம கடுப்பில் இருந்த அமெரிக்கர்களுக்கு Go Daddy -இன் செயல் மேலும் எரிச்சலை உண்டு பண்ண, இதனுடன் வியாபார ரீதியாகவும், தனியாகவும் Domain வைத்திருந்தவர்கள் தங்களது கணக்குகளை விலக்கிக்கொண்டு வேறு நிறுவனங்களில் தங்களது Domain -ஐ இணைக்க தொடங்கினார்கள். Go Daddy தன் ஆதரவு அறிவிப்பை வார முதல் நாளான திங்கள் அன்று வெளியிட அன்று மட்டும் 8,800 Domain -கள் இந்த தளத்தில் இருந்து வெளியேறி வேறு நிறுவனங்களில் தங்களை இணைத்துக்கொண்டனர். தினம், தினம் இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது.

Wikipedia -வும், தன் அறிவிப்பை அதன் உரிமையாளர் Jimmy Wales மூலம் Twitter -ரில், வெளியிட்டு தன் நிலையை உறுதிபடுத்தி உள்ளது.


தினமும் கூடிக்கொண்டே போன எதிர்ப்பு அலைகள் Go Daddy - ஐ ஸ்தம்பிக்கவே செய்து விட்டது. ஆம்!ஒரு வாரத்துக்குள் 72,000 -த்துக்கு மேலான Domain - களை இழந்து விட்டது. இதனை எதிர் கொள்ளவியலாத நிலையில் Go Daddy, SOPA -க்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கியது. இதன் பிறகு, விலகிக்கொண்ட தனது வாடிக்கையாளர்களை மீண்டும் இனைந்து கொள்ள கேட்டுக்கொண்டும், எவருமே சமாதானம் ஆனதாக தெரியவில்லை. இதோடு நில்லாமல், கடந்த டிசம்பர் 29 ஐ ,Go Daddy -லிருந்து விலகும் நாளாக (Move Your Domain Away from GoDaddy Day) அறிவிக்கப்பட்டது.

தமது எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்காக பிரபல இணையத்தளமான விக்கிப்பீடியா ஆங்கிலத் தளத்தை ஜனவரி 18 ஆம் திகதி, 24 மணிநேரம் முடக்குவதாக அதிரடியாக அறிவித்தார் ஜிம்மி வேல்ஸ்.

அதன் படி குறித்த தினம் ஏதாவது ஒரு தகவலை விக்கிப்பீடியா இணையத்தளத்தில் தேடிய போது:

wikipedia-strick.jpg

"சுதந்திர தகவல்கள் இல்லாத உலகை கற்பனை செய்து கொள்ளுங்கள். மனித வரலாற்றிலேயே பலர் மில்லியன் கணக்கான மணிநேரம் உருவாக்கிய உலகின் மாபெரும் தகவல் களஞ்சியமாக திகழ்கின்றது விக்கிப்பீடியா. ஆனால் அமெரிக்க காங்கிரஸ் சுதந்திர தகவல்களை முடக்கிவிட திட்டமிடுகின்றது இந்த நடவடிக்கையை எதிர்ப்போம்"

என்று கறுப்புத் நிறத்தில் அறிவித்தல் ஒன்றை போட்டிருந்தது. விக்கிப்பிடீயாவின் இந்த முடிவினால் அத்தளத்திற்கு வருகை தரும் 25 மில்லியன் பாவனையாளர்கள் பாதிக்கபடுவார்கள் என கணக்கிடப்பட்டது.

2012 ஆம் ஆண்டின் ஜனவரி 18ம் திகதி முக்கியமான நாளாகும். ஏனெனில் அன்றைய தினமே வரலாற்றில் மாபெரும் இணைய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என sopastrike.com தெரிவிக்கின்றது. இதற்கு ஏனைய இணையத்தளங்களின் ஆதரவையும் கோரினர்.

சில விவகாரங்களில் விக்கிபீடியா சரியான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டியிருந்தாலும் நடுநிலையைத் தவறவிடுவதில்லை எனவும், "என்சைக்ளோபீடியா நடுநிலையானதுதான், ஆனால் அதற்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது அது வேடிக்கை பார்க்காது" என விக்கிப்பீடியா ஸ்தாபகர் ஜிம்மி வேல்ஸ் தெரிவித்திருந்தார்.

கூகிள் நிறுவனமும் தனது பங்கிற்கு https://www.google.com/landing/takeaction/ என்ற பக்கத்தில் போராட்டத்தை ஆரம்பித்தது:
takeaction.pngசேவை நிறுத்தத்துக்கு நல்ல வரவேற்பு:

இணைய பாவணையாளர்களிடையே விழிப்புணர்வு மேற்கொள்ளும் முகமாக விக்கிபீடீயாவின் ஆங்கில பிரிவு மேற்கொண்ட திடீர் வேலைநிறுத்தம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அமெரிக்காவின் மிக பிரபலமான இணையத்தளங்களில் 10 வது இடத்திலிருக்கும் விக்கிபீடியா நேற்றைய ஜனவரி 18 போராட்டத்தின்
பின்னர் 19 ஆம் திகதி அன்று தனது முகப்பு பக்கத்தில் "விக்கிபீடியாவின் பாதுகாப்புக்காக ஒத்துழைத்தமைக்கு நன்றி" என குறிப்பிடப்பட்டிருந்தது.

'எனினும் நாம் இன்னமும் அதை செய்துமுடிக்கவில்லை' எனவும் கூறியுள்ளது. அமெரிக்காவில் கூகுள் ஹோம்பேஜில் கறுப்பு கட்டத்துடன் தோன்றிய லோகோவும் பலரின் கவனத்தை பெற்றிருந்தது. குறித்த லோகோவின் ஊடாக, 4.5 மில்லியன் பேர் அமெரிக்க காங்கிரஸுக்கு எதிரான ஆன்லைன் பெட்டிஷனில் கையெழுத்திட்டுள்ளனர்.
1492659-google-sopa-censorship-617-409.jpg

குறித்த தினத்தில் இச்சட்டத்தை எதிர்த்து 2.4 மில்லியன் குறுஞ்செய்திகள் டுவிட்டர் ஊடாக பதியப்பட்டுள்ளது.

விக்கிபீடியாவின் ஆங்கில பிரிவின் முகப்பு பக்கத்தின் ஊடாக இச்சட்டத்திற்கு எதிரான விழிப்புணர்வு பதிவை 4 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ, லாஸ்வேகாஸ், நியூயோர்க் நகரங்களில் இச்சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்ட பேரணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர் பேர்க், ஆர்ப்பாட்ட தினமன்று விடுத்த அறிவிப்பில்,
"இணையம் சார்ந்த சார்புக்கொள்கை உடைய அரசியல் தலைவர்களே தற்போது இந்த உலகத்துக்கு தேவை. இவ்வாறான தலைவர்களுடன் நாம் பல மாதங்களாக பேசிவருகிறோம். இதற்கான மாற்று வழிகளை தேடி வருகிறோம்" என தெரிவித்திருந்தார்.

அவருடைய சொந்த பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிருந்த இப்பதிவை 50,000 ற்கு மேற்பட்டோர் லைக் செய்திருந்தனர்.

கடந்த வருடம், நவம்பர் மாதம் அமெரிக்க செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபையில் முன்மொழியப்பட்ட இணைய திருட்டு தடுப்பு சட்ட வரைபானது (Stop Online Piracy Act, SOPA) மேலும் பல கலந்துரையாடல்களின் பின்னர் எதிர்வரும் வாரமளவில் சட்டபூர்வமாக அமலாக்கப்பட சந்தர்ப்பம் அதிகரித்துள்ளது. இது இணைய தணிக்கை முறை, இணையத்தை முடக்குவதாகவும், சுதந்திர பேச்சு மற்றும் குற்றவியல் முன்னறிவிப்பாளர்களுக்கு பயமுறுத்துவதாகவும் இருப்பதாக இச்சட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.

உதாரணத்திற்கு சிறிய வசதிகளுடன் இயங்கும், வெளிநாட்டு இணைய தளங்கள், வேறொரு பிரபலமான இணைய தளத்திலிருந்து ஒரு தகவலை அதன் அனுமதியின்றி பிரதி செய்து பிரசுரிக்குமாயின் அல்லது ஆட்சேபணைக்குரிய கருத்து பகிர்வொன்றை பிரசுரிக்குமாயின் குறித்த சிறிய இணையத்தளம் மீது வழக்கு தாக்கல்
செய்யலாம்.

கூகுள், பேஸ்புக், யாஹூ போன்ற தேடுபொறிகளில் குறித்த பதிவு பற்றிய சொற்களையே தேட முடியாத படி முடக்கலாம். அமெரிக்க வர்த்தக சந்தையை பாதுகாப்பதற்காகவே இச்சட்டம் என வெளிப்படையாக சொல்லப்பட்டாலும், உண்மையில் இணைய உலகின் இலவச தகவல் பகிர்வு சேவையை முடக்குவதற்கே அமெரிக்கா இச்சட்டம் மூலம் முயற்சிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இதற்கு முன்பு ஜப்பான் மற்றும் ஐக்கிய அமெரிக்காவினால் முன்மொழியப்பட்ட ACTA (Anti-Counterfeiting Trade Agreement) என்கிற உலகளாவிய சட்டமூலமும் இணைய திருட்டுக்களை தவிர்ப்பதற்காக இரகசியமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அவற்றை வெளிப்படுத்துமாறு எழுந்த குரல்களை தட்டிக்கழித்து சரியான பேச்சுவார்த்தைகளோ முடிவுகளோ எட்டப்படாத நிலையில் இந்த புதிய சட்டமூலங்கள் இணைய ஜாம்பவான்களாக திகழும் நிறுவனங்கள் முதல் சாதராண இணையப் பயனர்களிடையே பலத்த எதிர்ப்புக்களையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தி உள்ளன.

SOPA, PIPA மற்றும் ACTA பற்றி இன்ஷா அல்லாஹ் மீண்டும் ஒரு பதிவில் விரிவாக பார்ப்போம். இந்த சட்ட மூலங்கள் எமது நவீன வாழ்வில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை விபரிக்கும் குறும்படம் ஒன்று இதோ:
மூலங்கள்: 1) KTIC Google Group

S. M. Mohammed Mafaz,
BSc.(Hons) IT - SLIIT,
Freelance Software Solutions Consultant,
IT Demonstrator (OUSL - Puttalam Study Centre)
---------------------------------------
------------------------------------------------


No comments: