Saturday, March 9, 2024

ரமழான் ஆனந்தமும், காஸா மன அழுத்தமும்

மார்ச் 10, 2024 (ஷஃபான் 28) அன்று WhatsApp குழுமங்களில் என்னால் பதிவிடப்பட்டது.

மார்க்க அறிஞரும், சொற்பொழிவாளருமான அஷ்ஷெய்க் உமர் சுலைமான் (Omar Suleiman) அவர்கள் கடந்த March 01, 2024 அன்று அமெரிக்க பள்ளிவாசல் ஒன்றில் நடாத்திய குத்பா பிரசங்கத்தின் ஒலிப்பதிவை கேட்கக்கூடியதாக இருந்தது. அந்த குத்பாவில் கூறப்பட்ட செய்திகளின் சுருக்கத்தை தமிழில் முன்வைக்க விரும்புகிறேன் 👇🏻:


ரமழான் மாதம் வருகிறது என்றாலே வழமையாக எம் அனைவருக்கும் ஒரு வகை உள்ளார்ந்த ஆனந்தம் பிறக்கும். ஆனால் இம்முறை ரமழானானது சற்று வித்தியாசமானது. காஸாவிலும், பாலஸ்தீனத்திலும் நடைபெறும் உக்கிரமான படுகொலைகளின் காட்சிகள், செய்திகள் எமது கணினி, Phone திரைகளை அடையும் போது எமது உள்ளங்களில் இருந்து அகற்றப்பட முடியாத தாக்கத்தை ஏற்படுத்தி விட்டுள்ளன. அதன் காரணமாக எமது உள்ளங்கள் பாதிக்கப்படுவது இயற்கையானது தான். அது தவறில்லை.


என்றாலும் இந்த நிலைமையை எவ்வாறு எதிர்கொள்வது? உலக நாடுகளின் கையாலாக தன்மையினால் ஓர் பாலஸ்தீன சகோதரரின் உடலம் சிதறிச் சின்னாபின்னமாகி எம்மை கடும் கவலையில் உலுக்கும் அதே வேளையில், குறித்த சகோதரரின் புனித ஆத்மா இறைவனிடம் சென்று விட்டது என்ற ஓர் திருப்தியை அடைகின்றோம்!🪽


அது எவ்வாறு முடியும்?? ஓர் கடும் துயரிலிருந்து சடுதியாக ஆனந்தம் அடையும் நிலைக்கு எவ்வாறு ஓர் மனிதனால் மாற்ற முடிகின்றது? அதற்கு ஈமானைத் தவிர வேறு விளக்கம் இல்லை சகோதரர்களே. நபி (ஸல்) அவர்களின் ஸீறாவிலும், அவரது தோழர்களின் வரலாறுகளிலும் இதற்கான ஏறாளமான உதாரணங்களை காண முடிகின்றது.🕊️


1️⃣ நபி(ஸல்) அவர்களின் இறுதி நாட்கள் பற்றி ஆயிஷா (ரழி) அவர்களின் ஓர் அறிவிப்பில் வரும் ஓர் விசேடமான விடயத்தை கவனிப்போம். நபி(ஸல்) தமது அன்பு மகளார் பாத்திமா ஸஹ்ரா (ரழி) அவர்களை அருகில் அழைத்து ஏதோ காதில் கூறினார்கள். அதனை கேட்ட பாத்திமா (ரழி) அவர்கள் கடுமையாக அழுதார்கள். சற்று நேரத்தில் மீண்டும் அவர்களை அழைத்து ஏதோ ஒன்றை காதில் கூறினார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் பாத்திமா (றழி) அவர்கள் சிரித்தார்கள். அதனை ஆச்சரியத்துடன் அவதானித்த ஆயிஷா (ரழி) அவர்கள், "ஒருவர் கடும் துயர் ஒன்றிலிருந்து சடுதியாக ஆனந்தம் அடையும் நிலையை நான் கண்டதே இல்லை", அதற்கான காரணத்தை பாத்திமா (ரழி) அவர்களிடம் வினவிய பொழுது,


"முதலில் நபி(ஸல்) என்னை அழைத்த பொழுது தான் இவ்வுலகை விட்டு விடைபெற போகும் செய்தியை கூறினார்கள். அதனை கேட்டு அழுதேன். மீண்டும் என்னை அழைத்து 'நானும் அவருடன் விரைவில் சுவனத்தில் இணைய' இருக்கும் செய்தியை கூறிய பொழுது ஆனந்தத்தால் சிரித்தேன்" என்றனராம் பாத்திமா (ரழி) அவர்கள். அதன்படியே நபி(ஸல்) அவர்களின் மரணத்துக்கு பிறகு அவர்களின் குடும்பத்தில் மரணித்தவர்களுள் முதன்மையான வராக பாத்திமா (ரழி) அவர்களே காணப்பட்டார்கள்.


2️⃣ ஆயிஷா (ரழி) அவர்கள் தமது தந்தை அபூபக்கர் (ரழி) அவர்களைப் பற்றி குறிப்பிடும் பொழுது:


"நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்றத்துக்கு தம்முடன் புறப்பட தயாராகுமாறு கூறிய பொழுது,

என் தந்தையை போல ஆனந்தத்தால் கண்ணீர் வடித்த எவரையும் நான் கண்டதில்லை" என்கிறார்கள்.


3️⃣ நபி(ஸல்) அவர்கள் விண்ணுலக பயணம் மேற்கொண்ட பொழுது ஓர் மனிதரை காண்கிறார்கள். அவர் தனது வலப்பக்கமாக திரும்புகின்றார், அங்கு சில ஆன்மாக்கள் அவரை கடந்து செல்கின்றன. சிரிக்கின்றார். அப்படியே தனது இடப்பக்கமாக திரும்புகின்றார், அங்கும் மேலும் சில ஆன்மாக்கள் கடந்து செல்கின்றன. உடனே அழுகின்றார்.


இதனை அவதானித்த நபி(ஸல்) ஆச்சரியத்துடன் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் "இது யார்?", "இங்கு என்ன நடக்கிறது" என்று வினவிய பொழுது, ஜிப்றீல் (அலை) அவர்கள்,


"இவர் தான் அபுல் பஷர், உங்கள் தந்தை ஆதம் (அலை). அவரது வலப்பக்கமாக உள்ள ஆன்மாக்கள் சுவனத்துக்காக நிர்ணயிக்கப்பட்ட வை, இடப்பக்கமாக உள்ள ஆன்மாக்கள் நரகத்துக்காக நிர்ணயிக்கப்பட்ட வை" என்றனராம்.


இந்தச் செய்தியின் படிப்பினையில் ஓர் உண்மை புலப்படுகிறது. ஓர் ஆனந்த நிலையில் இருந்து சடுதியாக துயர் நிலைக்கும், துயர் நிலையிலிருந்து ஆனந்த நிலைக்கும் மாற்றமடைவது இறைவன் மனிதனுக்குள் ஏற்படுத்திய ஓர் தன்மையாகும். ஸஹாபாக்கள் ஓர் துயர் நிலையை அடைந்தால் அப்படியே மனம் உடைந்து போகும் நிலைக்கு செல்லவில்லை, மாற்றமாக அதிலிருந்து விரைவாக சுதாரித்து மனதை  தேற்றிக் கொள்ளும் ஓர் பயிற்சியை நபி (ஸல்) அவர்களிடம் கற்றார்கள்.


4️⃣ பத்ர் யுத்தம் முஸ்லிம்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அக்காலத்து ஃபிர்அவ்ன் ஆக செயற்பட்டவனான அபூஜஹ்ல் அழிக்கப்பட்ட மிகப் பெரிய வெற்றி. இந்த வெற்றிவாகையோடு மதீனா வந்து சேர்ந்த பொழுது நபி(ஸல்) அவர்களுக்கு ஓர் மிகப் பெரும் துயரச் செய்தி காத்துக் கொண்டு இருந்தது. தமது அருமை மகளார் ருகையா(ரழி) மரணித்த செய்தி தான் அது.


இந்த நிலைமையை சற்று கற்பனை பண்ணிப் பாருங்கள் சகோதரர்களே! அல்லாஹ் ஏன் இந்த நிலைமையை ஏற்படுத்த வேண்டும்? ஓர் மிகப் பெரிய வெற்றியின் பொழுது ஓர் கடுமையான துயரத்தை ஏற்படுத்துவதால் எதனை அல்லாஹ் கற்பிக்கின்றான்??


இன்னும் பல ருகையாக்கள் மனித அநீதியால் மரணிக்க இருக்கின்றார்கள்! 


மேலும் பல பத்ர் களங்களுக்கு முஸ்லிம் கள் தயாராக வேண்டும்!...என்பதுவே அதன் படிப்பினையாக கொள்ளலாம். இன்று பலஸ்தீன இனப்படுகொலை ஓர் பத்ர்!


5️⃣ மக்கா வெற்றியின் பொழுது அபூபக்கர் (றழி) அவர்களின் தந்தை அபூகுஹாபா அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அச்சந்தர்ப்பத்தில் தமது தந்தையை மிக்க மகிழ்ச்சியுடன் ஆரத்தழுவும் பொழுது நபி(ஸல்) அவர்களை காண்கிறார்கள். உடனே அபூபக்கர்(றழி) அவர்களின் கண்கள் குளமாகின்றன. நபி(ஸல்) அவர்கள் தமது தந்தையை போல கருதிய அபூதாலிப் அவர்களுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் நினைவுக்கு வந்து அதே தருணத்திலேயே நபி(ஸல்) அவர்களுக்காக அழுகின்றார்கள்.


இன்றைய குத்பா வுக்கு பின்னர் எம் மத்தியில் சமூக சேவைகளில் ஈடுபடுகின்ற சகோதரர் பாயிஸ் அவர்களின் தாயாரின் ஜனாஸா தொழுகை நடைபெற இருக்கின்றது. நான் உட்பட எம்மில் பலரையும் அந்த தாயாரின் மரணம் கவலைக்கு உள்ளாக்கி இருக்கின்றது. பயபக்தியுடன் வாழ்ந்த ஓர் சகோதரி. அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து மேலான  சுவர்க்கத்தை நல்க வேண்டும்.


அதே சமயம், அத்தொழுகைக்கு பின்னால் இன்னொரு முக்கியமான நிகழ்வு நடைபெற இருக்கிறது. இங்கே ஓர் சகோதரர் வந்து இருக்கின்றார். அவர் இஸ்லாமிய ஷஹாதத் கூறும் நிகழ்வும் நடைபெற இருக்கிறது. ஆகையால் சகோதரர்கள் அனைவரும் இரண்டு நிகழ்வுகளிலும் பங்கு கொள்ளுமாறு அன்பாக கேட்டுக் கொள்கிறேன்.


இது தான் இறை நியதி. ஒருவரை புதிய வாழ்க்கைக்காக அனுப்பி வைக்கின்றோம்; இன்னொருவரை புதிய வாழ்க்கைக்குள் வரவேற்கின்றோம்.


இது இறைவனின் அமைப்பில் உள்ள குளறுபடி அல்ல. யதார்த்தம். இதனை சரியாக புரிந்து வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வோமாக!


யா அல்லாஹ் காஸா, பாலஸ்தீன பிரதேசம் மற்றும் உலகில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் இந்த ரமழானில் உனது அருளை சொரிவாயாக! ஆமீன்!


தமிழில்: S.M.M.Mafaz

March 10, 2024