Saturday, December 1, 2012

இஸ்ரேலிற்கு எதிரான சைபர் (இணையப்) போர்

-S.M. Mohammed Mafaz

இந்த மாதத்தின் மத்தியப் பகுதியில் பலஸ்தீனிய விடுதலை போராட்டக் குழுக்களுக்கும், இஸ்ரேலிய இராணுவத்திற்கும் இடையில் நடைபெற்ற போரில், பௌதிகக்களத்தில் பலஸ்தீனியர்கள் பலகீனப்படுத்தப்பட்டாலும், இணையக் களத்தில் இஸ்ரேலிய அரசாங்கம் ஆட்டம் கண்டது.
ஹமாஸ் அரசாங்கத்தின் உயர் இராணுவ கட்டளை தளபதியான அஹ்மத் அல்ஜாபரியை விமானக் குண்டுத்தாக்குதல் மூலம் கொலை செய்ததன் மூலம் இந்த போரை இஸ்ரேல் அரசாங்கமே முடுக்கி விட்டதாக பரவலான ஊடகங்களில் இருந்து தெரிய வருகின்றது. அதற்கு பிற்பாடு நடைபெற்ற கிலி கொள்ளும் போரில் 163 அப்பாவி பாலஸ்தீனியர்களும், 6 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டமை நாம் அறிந்ததே. இது ஒரு புறம் இருக்க, குறித்த போர் பற்றிய முதல் அறிவிப்பை இஸ்ரேலிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் முன்பே, இஸ்ரேலிய இராணுவம் தனது Twitter கணக்கில் போர் முரசை முழங்கியது. அஷ்ஷஹீத் அஹ்மத் அல்ஜாபரி கொல்லப்பட்டதை உறுதி செய்த பின்னர் பின்வரும் பதிவை தனது Twitter கணக்கில் இட்டது:
“ஹமாஸ் உறுப்பினர்களுக்கு நாங்கள் கூறிக்கொள்வதானது, வருகின்ற அடுத்த நாட்களில் நீங்கள் கீழ் அல்லது மேல் நிலை அதிகாரிகள் எவராக இருப்பினும், உங்களது முகங்களை நிலத்துக்கு வெளியே காட்ட வேண்டாம்”.

அதற்கு பிறகு தமது வீரத்தை பறைசாற்றுவதற்காக பின்வரும் Poster ஐ வெளியிட்டது:

இதற்கு பதில் அளிக்கும் முகமாக ஹமாஸினுடைய இராணுவப் பிரிவான இஸ்ஸதீன் அல்-கஸ்ஸாம் தனது Twitter கணக்கில் பின்வரும் பதிலை பதிவிட்டிருந்தது:

“அருள்பாளிக்கப்பட்ட எங்களது கைகள் உங்களது தலைவர்களையும், வீரர்களையும் அவர்கள் எங்கிருந்தாலும் வந்தடையும் (நீங்களாகவே நரகத்தின் வாயில்களை உங்களுக்காக திறந்துள்ளீர்கள்)”

இதனை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் குறித்த Twitter கணக்கில் பலத்த செய்திக் கணைகள் ஏவப்பட்டுக் கொண்டிருந்தன. என்றாலும் இஸ்ரேலை பொறுத்தவரை, ஒட்டு மொத்த இணையப் போரில் பலத்த நெருக்கடியை சந்தித்துள்ளமை பல செய்திகளில் இருந்து புலனாகின்றது. இந்த குறும் போர் நடைபெற்ற காலப்பகுதியில் இஸ்ரேலிய அரசாங்க இணையதளங்களின் மீது 44 மில்லியனிற்கும் அதிகமான ஊடுருவல் (Hacking) முயற்சிகள் நடைபெற்றதாக அல்ஜசீரா ஆங்கில இணையத்தளம் தெரிவிக்கின்றது.

இஸ்ரேலிய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த பெறுமானங்களில் அதிகமான தாக்குதல்கள் இஸ்ரேலிய இராணுவம் சார்ந்த இணைய தளங்களையே குறி வைத்துள்ளன. இஸ்ரேலிய ஜனாதிபதியினுடைய இணையதளம் 10 மில்லியன் தடவைகளும், வெளிநாட்டு அமைச்சினுடைய இணைய தளம் 7 மில்லியன் தடவைகளும், பிரதமரின் இணையதளம் 3 மில்லியன் தடவைகளும் தாக்குதல் முயற்சிகளுக்கு உள்ளாகி உள்ளன.
ஒரே ஒரு தாக்குதல் முயற்சி வெற்றி ஈட்டியதாகவும், குறித்த இணைய தளம் 10 நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் அமுலுக்கு வந்ததாகவும், தான் அந்த தளத்தை பெயர் குறிப்பிட விரும்பவில்லை எனவும் இஸ்ரேலிய நிதி அமைச்சர் Yuval Steinitz தெரிவித்துள்ளார்.

Anonymous எனப்படும் அநாமதேய சர்வதேச இணைய ஆர்வலர் குழுமம் ஒன்று, காஸா தாக்குதலுக்கு பதிலடியாக 700 இஸ்ரேலிய இணையதளங்களை தாக்கி, உருக்குலைத்து, அல்லது செயலிழக்கச் செய்ததாக ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தது. “OpIsrael” என்று பெயரிடப்பட்டிருந்த இந்த இணையத்தாக்குதல் நடவடிக்கையின் பிரதான குறிக்கோளாக இருந்தது Mashav எனப்படும் இஸ்ரேலிய வெளிநாட்டு அமைச்சினுடைய சர்வதேச அபிவிருத்தி திட்டமாகும்.

தாக்கப்பட்ட அநேகமான இஸ்ரேலிய இணையத்தளங்களில் தோன்றிய பலதீனிய ஆதரவு பதாகை


தமது Twitter கணக்கில் Anonymous வெளியிட்டிருந்த ஒரு செய்தியில் மேற்படி அபிவிருத்தி திட்டத்தின் உள்ளக தகவல் களஞ்சியத்தை (Database) தாம் சேதப்படுத்தியுள்ளதாக கூறினர். அத்துடன் ஏனைய இணைய ஊடுருவிகளையும் (Hackers) தம்முடன் இணைந்து இஸ்ரேலிய அரசுக்கோ, இராணுவத்துக்கோ சொந்தமான அல்லது துணைபோகின்ற இணையதளங்களை தாக்குவதற்கு உதவுமாறு பகிரங்க அழைப்பு விடுத்திருந்தனர்.

இஸ்ரேலிய துணைப்பிரதமர் Silvan Shalom இனுடைய தனிப்பட்ட Twitter கணக்கும் குறி தவறவில்லை. Z Company Hacking Crew எனும் ஒரு இணைய ஊடுருவல் குழு இவரது Twitter கணக்கை கைப்பற்றி பலஸ்தீனிய ஆதரவு செய்திகளை வெளியிட்டிருந்தமை இஸ்ரேலிய வட்டாரங்களில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இணைய ஊடுருவலுக்கு இலக்கான இஸ்ரேலிய துணைப்பிரதமரின் Twitter கணக்கில் பதியப்பட்ட சில பாலஸ்தீனிய ஆதரவு செய்திகள்.

காடிமா கட்சியினுடைய இணையதளம் தாக்குதலுக்கு இலக்கானது

ஜெருசலேம் வங்கி (Bank of Jerusalem), மற்றும் இஸ்ரேலினுடைய காடிமா கட்சியினுடைய இணைய தளங்களும் மிக முக்கியமான இலக்குகளாக காவுகொள்ளப்பட்டன. காடிமா கட்சியினுடைய இணைய தளம் தாக்குதலுக்கு உள்ளாகி கொஞ்ச நேரத்தில் செயலிழக்கச் செய்யப்பட்டது.

ஊடுருவப்பட்ட பல இணையத்தளங்கள் செயலிழந்த நிலையில், ஏனைய தளங்கள் பலஸ்தீனிய ஆதரவு செய்திகளை அல்லது சுலோகங்களை காண்பித்தன.

தாக்குதல்கள் யாவும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தாலும், அநேகமானவை இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனிய பிரதேசங்களில் இருந்து தான் வந்திருப்பதாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
“மில்லியன் கணக்கான இணைய தாக்குதல்களை தொடர்ந்தும் எமது அமைச்சினுடைய கணினிப்பிரிவு இடைமறிக்கும்” என்று Steinitz தெரிவித்துள்ளார். “கணினிமயப்படுத்தப்பட்ட தற்காப்பு முறைகளில் நாம் முதலிட்ட முதலீடுகளின் கனிகளை இன்று மகிழ்ச்சிகரமாக அனுபவிக்கின்றோம்” என்று மேலும் கூறியுள்ளார்.

Steinitz, அரசாங்க இணையதளங்கள் தாக்கப்படும் நிலைமையை கருத்தில் கொண்டு ,தமது அமைச்சினை அவசர முறைமையில் இயங்குமாறு பணித்துள்ளார்.

குறித்த இந்த காஸா யுத்தத்தில் இருசாராமுமே, குறிப்பாக இஸ்ரேலானது சமூக வலைத்தளங்களை யுத்த அரங்கில் ஒரு ஆயுதமாக பயன்படுத்தியுள்ளமை தெளிவாக புலனாகின்றது.
தற்போதுள்ள பெரும்பாலான சமூக வலைதளங்களில் இஸ்ரேலிய இராணுவம் தனது இருப்பை உறுதி செய்துள்ள நிலையில், பலஸ்தீனிய போராளிகள் Twitter இல் மாத்திரம் ஸ்திரமாக உள்ளனர்.
இஸ்ரேலினுடைய உயர் தகவல் அதிகாரியான Carmela Avner கூறும்போது,

“இந்த யுத்தம் மும்முனைகளில் நடைபெறுகின்றது. முதலாவது பௌதிக ரீதியானது, இரண்டாவது சமூக வலைத்தளங்கள்
, மூன்றாவது இணையம்”.
எது எவ்வாறு இருப்பினும் முஸ்லிம் உம்மத் இந்த உலகத்தில் உள்ள குழப்பவாதிகளை எதிர்த்து நிற்பதற்கு மனோ ரீதியாகவும், கட்டமைப்பு ரீதியாகவும், தொழினுட்ப ரீதியாகவும் பெருமளவில் தயாராக வேண்டி உள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மை.

தகவல்கள் : AlJazeera.com, IDF Twitter, AlQassam Brigades Twitter