Friday, April 23, 2010

ஏன் திருமணம்?

பாடம் ஒன்று: ஏன் திருமணம்?

(M.Sc. Wifeology - 1)


இந்தக் கேள்விக்கு நேரடியான விடையே கிடையாது. கண்ணதாசன் சொன்ன மாதிரி, நான் மாட்டின காரணத்தை நானே அறியும் முன்னே நீயும் வந்து ஏன் கேட்கிறாய்னுதான் கேட்கணும்.

"Everybody should be married. In fact, happiness is not everything" னு சொன்ன அறிஞரோட விடைதான் கொஞ்சம் கிட்டக்கிட்ட வருது.

ரொம்ப யோசிச்சா, இந்த மாதிரி சில காரணங்களைத் தேடிப் பிடிக்கலாம்.

1. நாளைக்கு வயசாயி உடம்பு சரியில்லாம போனா பாத்துக்க ஒரு ஆளு வேணாம்? (மனைவி வேணுமா நர்ஸ் வேணுமான்னு தெரியாத ஆளுங்க! - நாளைக்கு உனக்கு வயசாகும்போது அவங்களுக்கும் வயசாகாதா? வெளிய சொல்லிக்கறத நாம நம்பவா முடியும்??)

2. வம்சம் விளங்க வேணாமா? (பெரிய ராஜ ராஜ சோழன் வம்சம்!)

3. எத்தனை நாள்தான் இப்படி வாழ்க்கையில பிடிப்பே இல்லாம ஓட்ட முடியும்? (மவனே இருக்குடீ உனக்கு! வாயுப்பிடிப்பு., சதைப்பிடிப்பு, சம்பளப்பிடிப்பு எல்லாம் கிடைக்கும் கவலையே படாதே!)

4. வீட்டுக்கு விளக்கேத்த ஒரு பொண்ணு வேணுமே! (ஸ்விட்சுன்னு ஒண்ணு எதுக்கு கண்டுபிடிச்சிருக்காங்களாம்?)

5. சாப்பாட்டுக்கு கஷ்டப்பட வேணாம் இல்லையா? (இது கரெக்டு.. எப்படியும் சமைக்கக் கத்துக்கத்தான் போறே!)

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன அப்ப்டின்னு சொல்லும்போதே தெரிய வாணாம்? மவனே உனக்கு சாவுமணிதாண்டான்னு!

கல்யாணம் ஆனவங்களோட பொறாமை மற்றவர்களோட திருமணத்துக்குக் காரணமாகி விடுவது உளவியல் அறிஞர்கள் ஆராய வேண்டிய விஷயம்.  "என்னங்க, நம்ம சித்தப்பா பொண்ணுக்கு உங்க பிரண்டு சரவணனைக் கேக்கலாமா" என்ற கேள்விக்கு, சரி என்று சொல்லும் முன், "நான் மட்டும் என்ன முட்டாளா?" என்ற எண்ணமும் "எஞ்சாய் பண்றாண்டா" என்ற பொறாமையும் இருப்பது திண்ணம்.

பெரியோர் நிச்சயித்த கல்யாணத்துக்கும், காதல் திருமணத்துக்கும் கொலைக்கும் தற்கொலைக்கும் ஆன வித்தியாசம்தான் என்று சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.

ஆனால், மத்தவங்க என்ன சொன்னாலும், வேறு சில சிற்றின்பக் காரணங்களுக்காக, "கல்யாணத்துக்கு என்ன அவசரம்? நாலஞ்சு நாள் போகட்டும்" என்று சொல்லும் மாப்பிள்ளைதானே முதல் குற்றவாளி?

நான் சொல்ல வர சிற்றின்பம், பெரியோர் ஆசீர்வாதத்துடன் சைட்டடிப்பது, நாம என்னவோ ஆணழகன் மாதிரி எந்த போட்டோ வந்தாலும் "Forehead ஆ இது? Four Head மாதிரி இருக்கே!" "பொண்ணு கிளி மாதிரின்னு சொன்னாங்களே? மூக்கை மட்டும்தான் சொன்னாங்களா?" என்று வர்ஜ்யா வர்ஜ்யம் இல்லாமல் கமெண்ட் அடிப்பது, திடுதிப்பென்று கிடைக்கும் எலுமிச்சை வெளிச்சம் போன்ற சிற்றின்பங்களைச் சொல்றேன்.

ஆனா ஒண்ணு.. கல்யாணம் பண்ணாம நிம்மதியா இருக்கறது 1 - 2% ஆளுங்கதான். ஆடை இல்லாத ஊரிலே கோவணம் கட்ட முடியாதவங்க எப்படி கல்யாணத்துக்குத் தயார் ஆவது எப்படின்னு அடுத்த திங்கள் சொல்றேன்.

வீட்டுப்பாடம்:
இந்த யூ ட்யூப் வீடியோவைப் பார்க்கவும்:
http://www.youtube.com/watch?v=pSWTVXh_Yns


ஒரு டிஸ்கிளெய்மர்:

பிரச்சினையில்லாத திருமண வாழ்வை இந்த வகுப்புகள் வழங்கும் என்ற உடோபியக் கனவுகளை நம்பவேண்டாம். அது ஒரு மாயை.  இதன் ஆசிரியர்களின் வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களின் மீள்பார்வையில் Retrospective சிந்தனைகளின் விளைவே இந்த வகுப்புகள். இது ஒரு Exact Science உம் கிடையாது. மனைவிகள் என்னும் பிரகிருதிகளுடான உளவியலில் Scienceக்கும் எந்த இடமும் கிடையாது, Exact கும் எந்த இடமும் கிடையாது. இந்த வழிமுறைகளை முயற்சிப்பவர்கள் தத்தம் சொந்தப் பொறுப்பின் பெயரிலேயெ செயல் படுபவர்கள் ஆவார்கள். மீறி ஏற்படும் வீக்கங்களுக்கும் ரத்தகாயங்களுக்கும் கல்லூரி பொறுப்பேற்காது.

இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்
http://penathal.blogspot.com/2007/10/m-sc-wifeology-1.html


Tuesday, April 20, 2010

கமல்ஹாசன் கவிதைகள்



 

 

 

(நடிகர்) கமல்ஹாசன் கவிதைகள்

*

"பெருஞ்சிங்கம்"

ஞானமெனும் பெருஞ்சிங்கம்
எறும்புகளை உண்பதில்லை,
இறந்தபின் சிங்கத்தை
எறும்புகள் உண்பதுண்டு.

- கமல்ஹாசன்

*

பிரதிபிம்பம் பழங்கனவு
மறந்த என் மழலையின் மறுகுழைவு
மகளே
உனக்கு என் மூக்கு என் நாக்கு!

என் தாய் பாடித் தூங்கவைத்த தாலாட்டு
தினம் உனக்காய் நான் படிப்பேன் என் குரலில்
பாசத்தில் எனைப் பெற்றோர் செய்த தவறெல்லாம்
தவறாமல் நான் செய்வேன்
என் ரத்தம் எனது சதை எனக் கூவி
உன் சித்தம் உன் போக்கை இகழ்ந்திடுவேன்
உன் போக்கு இதுதான் என நீ மறுக்க
உடைந்த மனதுடனே மூப்பெய்வேன்
என் அப்பனைப் போல்!

அன்று - சாய் நாற்காலியில் வரப்போகும்
கவிதைகளை இன்றே நான் எழுதிவிட்டால்
அன்று - நான் பேசலாம் உன்னோடு

எழுதிவிட்டேன்
வா - பேச!

- கமல்ஹாசன்

*

"நச்சு"

நாகத்தின் நச்சதனைத்
தூற்றுவார் தூற்றிடினும்
நச்சதற்குக் கேடயம்போல்
தற்காப்பு ஆயுதமே
பறவைக்கு அலகினைப்போல்
பசுமாட்டுக்குக் கொம்பைப்போல்
நமக்கெல்லாம் பொய்யைப்போல்
தப்பிக்கும் ஓர்வழிதான்
நாகத்தின் நச்சென்பேன்

- கமல்ஹாசன்

நன்றி:
http://selventhiran.blogspot.com/2007/07/blog-post.html